கார்ப்பரேட் அரசியல்- கலங்கும் திமுக மா.செ.க்கள்!

கார்ப்பரேட் அரசியல்- கலங்கும் திமுக மா.செ.க்கள்!
Published on

பிரஷாந்த் கிஷோர்... இந்தப் பெயரை தமிழ்நாட்டு வாக்காளர்கள் இனி அதிகம் கேள்விப்பட வேண்டியிருக்கும்.

தமிழகத்தில் கமலஹாசனின் மநீம, ரஜினிகாந்த், அதிமுக ஆகியவற்றுடனான பணி மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இவர் கைகோர்த்திருப்பது திமுகவுடன். 2021-ல் வர இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டமிடல், பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் வியூகங்களை இனி பி.கே என்னும் பிரஷாந்த் கிஷோர்தான் வகுக்கப்போகிறார்! சும்மா இல்லை! பல கோடிகள் பணமாகப் பெற்றுக்கொண்டுதான்.

2016 தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக சார்பில் பிரசார வடிவங்களை தயாரிக்கும் பொறுப்பு  கட்சிக்கு வெளியே இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்படுவது தொடங்கிவிட்டது. நமக்கு நாமே என்ற பெயரில் முக ஸ்டாலின் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து தமிழகம் முழுவதும் சுற்றிவந்தது ஓஎம்ஜி எனப்படும் நிறுவன ஆலோசனையின் பேரில்தான். மாலை நேரங்களில் ஒற்றை ஆளாக நின்று முக ஸ்டாலின் பெருங்கூட்டத்தில் உரையாற்றி அதன் மூலம் அவருக்கொரு பிம்பத்தை உருவாக்க ஆலோசனை, அது தொடர்பான வடிவமைப்புகள் அனைத்தையும் செய்தது அந்நிறுவனத்தின் சுனில் என்பவர் தலைமையிலான குழு( இவர் முன்பு பிரஷாந்த் கிஷோருடன் இனைந்து பணிபுரிந்தவர்தான்) என்பதை நாம் அறிவோம். தொகுதிகளில் வேட்பாளர் நியமனம், வாக்காளர் மனநிலை என்றெல்லாம் அவர்கள் ஆலோசனை அளித்தார்கள். ஆனாலும் அந்த தேர்தலில் சின்ன இடைவெளியில் ஆட்சியைத் தவறவிட்டது திமுக. பின்னர் வந்த இடைத்தேர்தல்களிலும் அவர்களின் ஆலோசனைகள் தொடர்ந்தன. ஆனால் அவர்களின் பணியில் திருப்தி ஏற்படாத நிலையில் திமுக தலைமை பி.கேவை களமிறக்கி இருக்கிறது. அவரது ஐபேக் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஐநா சபை அதிகாரியாக ஆப்பிரிக்காவில் பணியாற்றியவர் பொது சுகாதாரத் துறை கொள்கை வல்லுநர் பிரஷாந்த் கிஷோர். இவர் 2009 - லேயே ராகுல்காந்தியைச் சந்தித்தார். அவர் சொன்ன சமூகவியல் ஆலோசனைகள் ராகுலைக் கவரவில்லை. பிறகு சில காலம் கழித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திட்டகமிஷன் அறிக்கையில் இருந்த தகவல்கள் அடிப்படையில் பொதுசுகாதாரம் பற்றிய கட்டுரை ஒன்றை அனுப்பினார். அதே கட்டுரை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் அனுப்பப்பட்டது. சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த பதில் வரவில்லை. ஆனால் குஜராத்தில் இருந்து வந்தது. மோடி இவரின் திறமையைப் பார்த்து அழைத்துக்கொண்டார்.

இந்தியா முழுமைக்குமான நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரத்தை கிஷோர் உருவாக்கிய

சிஏஜி என்ற அமைப்பு கவனித்தது. மோடியின் நடை உடை பாவனை பேச்சு எல்லாவற்றையும் மாற்றி அமைத்ததார்கள். சமூக ஊடகங்கள், தொகுதி அளவிலான சர்வேக்கள், மோடியின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துதல் போன்றவற்றுக்காக திட்டங்கள் வகுத்தார்கள். உதாரணத்துக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவருக்கு செல்வாக்கு குறைவாக இருப்பதைக் கண்டு, அங்கே சிறப்புக்  கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்தார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் படையை இதற்குப் பகிர்ந்துகொண்டார்கள்.

மோடி டீக்கடைக்காரர் என்று மணிசங்கர் அய்யர் விமர்சிக்க, அதை வைத்தே சாய் பர் சர்ச்சா.. என்று (தேநீர் பேச்சு) ஒரு பிரச்சாரத்தை வடிவமைத்தார்கள். ஆயிரம் டீக்கடைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இது நடத்தப்பட்டது. பல இடங்களில் 3டி ஹோலோ கிராம்களாக மோடி தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாடு முழுக்க முழுநேர, பகுதி நேரப் பணியாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் உருவாகும் மாற்றங்களை, மக்களின் எண்ணங்களை உள்ளூர் பிரச்னைகளை அனுப்பிக்கொண்டே இருந்தனர். சுமார் 450 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பற்றி  ஒவ்வொன்றைக் குறித்தும் 200 பக்கத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணியாளர்களால் அலசப்பட்டு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கட்சிகளில் வழக்கமான முறையில் தலைவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டு கட்சித் தொண்டர்களால் மேற்கொள்ளப்படும் பரப்புரையிலிருந்து இது வேறுபட்டு இருந்தது.

அந்த தேர்தலுக்கு முன்பாக கரண் தாப்பர் மோடியை பேட்டி கண்டதும் தர்மசங்கடமான கேள்விகள் எழுப்பப்பட, அவர் நேர்காணலில் தொடக்கத்திலேயே வெளியேறியதும் நிகழ்ந்தன. இந்தப் பேட்டியை மோடிக்கு சுமார் 30 தடவைகளுக்கு மேல் போட்டுக்காட்டி சங்கடமான கேள்விகளை எப்படி சமாளிப்பது என்று பிகே மோடிக்கு பயிற்சி அளித்திருக்கிறார். இது பின்னாளில் கரண் தாப்பர் அறிவித்த தகவல்.

2014- ல் மோடி பெற்ற வெற்றியில் பிகேவுக்கும் பங்கு இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். அவரும் நம்பினார். எனவே மோடி ஆட்சியில் தங்கள் நிறுவனத்துக்குகொள்கை வகுக்கும் அமைப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் மோடி அதற்கு இடம் தரவில்லை. மோடி வேறு பதவி தர விரும்பியதாகவும் அதற்கு பிகே மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் பிகே கழற்றிவிடப்பட்டார். அதன் பிறகு தேர்தல் பிரச்சார வியூகங்களை பிற கட்சிகளுக்கும் வடித்துத்தர ஐபேக் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இதைக் கொண்டு 2015-ல் பீஹாரில் நிதிஷ் - லாலு - காங்கிரஸ் கூட்டணிக்கு வியூகங்கள் வகுத்தார். நிதீஷ் முதல்வர் ஆனார்.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க் கூட்டணிக்கு எதிராகத்தான் அங்கே அவர் வேலை பார்த்தார். 2017&ல் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனாலும் காங்கிரஸ் அங்கே தோல்வியைத் தழுவியது. ஆனால் பஞ்சாப் மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் அமரிந்தர் சிங்குக்காக வேலை பார்த்ததில் சிங் வெற்றிபெற்று முதல்வர் ஆனார்.

இதே சமயத்தில் ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜகன்மோகன் ரெட்டி, இவரை தன் பிரசார ஆலோசகராக இணைத்துக்கொண்டார். சமர சங்காவரம்,  அண்ணா பிலுப்பு,  பிரஜா சங்கல்ப யாத்திரை போன்ற பிரசாரத்திட்டங்களை ஜெகனுக்கு வகுத்துக்கொடுத்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளருடன் இணைந்து செயல்படும் பொறுப்பு நபர் ஒன்றை நியமிப்பது, அவர் மூலம் கட்சியின் பிம்பம், உள்ளூர் பிரச்னைகள், கட்சிக்கு ஆதரவு போன்றவற்றுக்கான தகவல்களைப் பெற்று செயல்படுவது, ஆய்வுகள் செய்வது, பிரச்னைகளைக் களைவது ஆகியவற்றில் கவனம் செலுத்தினர். ஊழல் வழக்குகளால் தளர்ந்துபோயிருந்த ஜெகனின் பிம்பத்தை மேம்படச் செய்வதிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தியது. 2019 தேர்தலில் ஜெகனின் கட்சி வெற்றிபெற்றது பிகேவின் பெருமை மிகுந்த பரிசுக் கோப்பையாக அமைந்துள்ளது.

தற்போது நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் துணைத்தலைவராக இருக்கும் பிகே, அடுத்ததாக மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக இருக்கும் மம்தாவின் அனைத்து செயல்பாடுகளும் இவரது ஆலோசனையில் பேரில் நடந்துகொண்டுள்ளன. 2021&ல் அங்கு வர இருக்கும் தேர்தலில் அம்மாநிலத்தில் செல்வாக்கு வளரும் நிலையில் இருக்கும் பாஜகவை எதிர்கொள்ளவே இவர் கவனம் செலுத்தவேண்டி இருக்கும்.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் செய்த விஷயங்களை செயல்படுத்தவே அவர் முயலுவார். தலைவர் முக ஸ்டாலினின் பிம்பம் அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ளும் படியான விதத்தில் செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார். ஏற்கெனவே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவற்றிலிருந்து எப்படி மாறுபட்ட உத்தி மேற்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்திருந்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திமுகவைப் பொருத்தவரை மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள்தான் மிக முக்கியம். பலர் குறுநில மன்னர்களாக

செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். கட்சி தொடங்கியதிலிருந்தே அந்தந்த பகுதியைச்

சேர்ந்த பெருந்தலைகளால் நகர்த்தப்படும் தேராகத்தான் இக்கட்சியின் செயல்பாடு உள்ளது. வேட்பாளர் தேர்வில் அவர்களின் குரலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். அதுதான் வழக்கம். ஆனால் ஒரு முழுமையான கார்ப்பரேட் நிறுவனம் ஆதாரங்களுடன் அளிக்கும் அறிக்கைப்படி வேட்பாளர் தேர்வு நடைபெறுமெனில் அது எப்படி கட்சியின் போக்கைப் பாதிக்கப்போகிறது என்பது கேள்விக்குறி. தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக நான் மாறுவேன் என்ற ஸ்டாலினின் கருத்தையும் இத்துடன் கவனத்தில் கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் செல்வாக்கைப் பெற்றவர்கள் போன்றவர்கள் வழியாக வேட்பாளர் தேர்வு ஆதிக்கம் செலுத்தப்படுவதும் முன்காலத்தில் வழக்கமாக இருந்தது. இதையும் திமுக தலைவர் சமாளிக்கத் தயாராகவேண்டும். பிகேவின் அமைப்பினர் மா.செக்களிடம் பேசப்போவது இல்லை. தலைமையுடன் மட்டுமே தொடர்பில் இருப்பார்கள். வேட்பாளர் தேர்வில் மா.செக்களின் கருத்தை கணக்கில் கொள்வதா ஐபேக் அமைப்பின் கருத்தைக் கணக்கில் கொள்வதா என்பதில் ஒரு சமநிலையை திமுக தலைவர் பேணியாகவேண்டும். ஆனால் பிகேவின் பரிந்துரையை கட்சி ஏற்காவிட்டால் விளைவுகளுக்கு ஐபேக் பொறுப்பேற்காது என்பது ஒப்பந்தம்.

பிகே எப்போதும் வெற்றிபெறும்நிலையில் இருக்கும் பக்கமே சாய்வார். 2012 - ல் மோடிக்கு குஜராத்திலும் இந்தியாவிலும் பெரும் பிம்பம் இருந்தது. அதுதான் இவருக்கு உதவிகரமாக இருந்தது. பிகாரில் மகா கூட்டணி இருந்தது. பஞ்சாப்பில் ஆளும் அகாலி தளத்துக்கு எதிரான மனநிலை இருந்தது. ஆந்திராவில்ஜெகன் மீது ஓரளவுக்கு மக்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. இவற்றால் பிகேவின் வியூகங்கள் வெற்றி பெற்றன. தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் நிலையைப் பார்த்த பின்னரே அதிமுகவுக்குப் பணியாற்றுவதை விட திமுகவுக்கு பணியாற்றுவது நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

கட்சி சார்பற்ற முறையில் அவர் சகட்டுமேனிக்கு பல மாநிலங்களிலும் தங்கள் நிறுவனம் மூலம் அரசியல் பிரசார வேலைகளைச் செய்வதைப் பார்த்தால் எல்லா கட்சிகளின் செல்வாக்கு குறித்த தகவல்களும் அவர் கைவசம் போய்ச் சேர்ந்துவிடும்.

இப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வசம் கட்சிகளின் உள்தகவல்கள் போய்ச் சேர்வது ஜனநாயகத்துக்கு நல்லதா என்ற கேள்வியும் உள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஆலோசகராக வேலை பார்த்தபோது அக்கட்சியின் தமிழக உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவர் கையில் உள்ளன. இதைப் பெற்ற அவர் அதிமுகவுக்கு ஆலோசனை சொல்லப் போனதும் இப்போது திமுகவுக்கு வியூகம் வகிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பதும் மநீமவுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ''மநீம&வை விடுங்கள். அது சில ஆண்டுகள் அனுபவம் கொண்ட கட்சி. திமுக முக்கால் நூற்றாண்டுக் கட்சி. அது திரட்டி வைத்திருக்கும் தகவல்கள், அக்கட்சியின் உள்விவகாரங்களின் திரட்சி மிகப்பெரியது. இதைப் பற்றிய விவரங்கள் வெளியே இருக்கும் அமைப்புக்குப் போய்ச் சேர்வது நல்லதா? இதுபோன்ற கேள்வியை இப்போதுதான் திமுக போன்ற கட்சி எதிர்கொள்கிறது. இதற்கான பதில்களைக் கண்டறியவேண்டியது அக்கட்சிதான்'' என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.

சமீபத்திய குடியுரிமைச் சட்டதிருத்தத்துக்கு எதிராக பிஹார் முதல்வர் நிதீஷ்குமார் பேசி இருக்கிறார். இது பிகேயின் ஆலோசனையில் பேரில் மேற்கொள்ளப்பட்ட செயல் என்றே கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளைச் சேர்ந்த அனைத்து மாநில முதல்வர்களுடன் நேரடியாகப் பேசும் நிலையில் அவர் இருக்கிறார். ராகுல்காந்தி, தன் கட்சி ஆளும் மாநிலங்களில் என் ஆர் சி நடைமுறைப் படுத்தப்படாது என்று அறிவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழியாக ஏற்பாடு செய்யவேண்டும் என்று ட்விட்டர் மூலம் நேரடியாக அவர் ஆலோசனையும் கூறியது கவனிக்கப்பட்டது. வெறுமனே ஓர் அரசியல் ஆலோசகராக, வியூகம் வகுப்பாளராக இருப்பதை விட பிரஷாந்த் கிஷோருக்கு மேலும் சில கூடுதல் கனவுகள் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தையும் அவரது வளர்ச்சியும்  செயல்பாடுகளும் ஏற்படுத்துகின்றன.

பின்குறிப்பு:

ஒரு நேர்காணலுக்காக மு.கருணாநிதியை பதினைந்து ஆண்டுகள் முன்பு சந்தித்தது நினைவில் வருகிறது. கோபாலபுரம் வீட்டில் நேர்காணல் முடிந்ததும் எங்களுடனே படியிறங்கி வந்தார். வெளியே செல்ல காரில் ஏறி அமர்ந்தவர், ஓரமாக நின்ற எங்களை அழைத்தார். நாங்கள் செய்தியாளர் இருவர். ஒரு புகைப்படக்கலைஞர். மூவர் பெயரையும் கேட்டவர், அதை ஒரே பெயராகச் சுருக்கிச் சொல்லிப் பார்த்துக்கொண்டார். ‘‘ஞாபகம் வைத்துக்கொள்ளணும் அல்லவா?'' என்றும் சொல்லிக்கொண்டார். கருணாநிதி போன்ற ஒரு தலைவர் இருந்தவரைக்கும் எந்த பிகேவுக்கும் தேவை இல்லாமல் இருந்தது. அவர் ஒரு சட்டமன்றத் தொகுதி என்றால் அதன் அடிப்படைத் தொண்டன், அவன் கிராமம் வரை நினைவில் வைத்திருப்பார். ஆனால் இன்று அவரது வெற்றிடத்தை நிரப்ப பிகேக்கள் நிச்சயம் தேவைப்படுகிறார்கள்.

ஜனவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com